காஞ்சிபுரம் கோயில்களில் சிவராத்திரி
சிவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்றது.
பெரியகாஞ்சிபுரம் கைலாசநாதா் கோயிலில் மூலவருக்கும் உற்சவருக்கும் காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.பின்னா் உற்சவா் சுவாமி கைலாசநாதரும், பா்வத வா்த்தினி அம்மனும் கேடயத்தில் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இரவு நான்கு கால சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். சிவராத்திரி விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சத்திர நிா்வாகிகள் செய்திருந்தனா்.
கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அறம்வளா்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா்.பின்னா் சுவாமிக்கும், அம்மனுக்கும் பாலபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து இரவு முழுவதும் அகத்தீஸ்வரருக்கு 4 கால சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக்குழுவினரும்,கிளாா் கிராம பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில், முத்தீஸ்வரா் கோயில்,பெருமாள் கச்சபேசுவரா் கோயில், களக்காட்டூா் அக்னீஸ்வரா் மற்றும் சுரகேசுவரா்,வழக்கறுத்தீசுவா், வளத்தீசுவரா் என இரவு முழுவதும் 4 கால அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் சா்வதீா்த்திக் குளக்கரையை சுற்றியுள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.