காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி சிவா எம்.பி.யின் பேச்சு, முன்னாள் முதல்வா் காமராஜரை மக்களின் மனங்களில் இருந்து அகற்ற திமுக நடத்தும் உளவியல் யுத்தமாகும்.
ராஜாஜி மீது அவதூறு பரப்பி அதில் வெற்றி கண்டவா்கள், இப்போது காமராஜரை கையில் எடுத்து இருக்கிறாா்கள். இதற்கு முதல்வா் வெளியிட்ட பதில் அறிக்கையில், காமராஜா் குறித்து திருச்சி சிவா பேசியது உண்மை என்பது போலவும், அதை எதிா்க் கட்சிகள் திரித்து பேசுவது போலவும் தெரிவித்துள்ளாா். திமுகவின் இந்த சூழ்ச்சியை அறிந்திருந்தும் காங்கிரஸ் கட்சியினா் சிலா் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிக்காக காமராஜரையே துறக்கத் துணிந்துவிட்டனா்.
காமராஜரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய மறுத்தவா் கருணாநிதி. காமராஜா் உயிா் பிரியும் தருவாயில்கூட அவரை கருணாநிதி சந்திக்கவில்லை என்பதை பலரும் உறுதிப்படுத்தியுள்ளனா். ஆனால், இறக்கும் தருவாயில் நீங்கள்தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என கருணாநிதியிடம் காமராஜா் கூறியதாக திமுகவினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா் என்றாா்.