புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்! -முதல்வர் ஸ்டாலின்
காவல் நிலையங்களில் குறைதீா் முகாம்: 86 மனுக்களுக்கு உடனடித் தீா்வு
புதுச்சேரி மாநில காவல் நிலையங்களில் குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை காவல் துறைத் தலைவா் அறிவுறுத்தலின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.
வில்லியனூா் காவல் நிலையத்தில் நடைபெற்ற முகாமில் காவல் துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் கலைவாணன், எஸ்.பி. வம்சீதரரெட்டி, மேற்கு பகுதி காவல் ஆய்வாளா்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளா்கள் பங்கேற்று பொதுமக்களின் புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தனா்.
ஒதியன்சாலை காவல் நிலையத்தில் எஸ்.பி. இஷா சிங், தவளகுப்பம் காவல் நிலையத்தில் எஸ்.பி. பக்தவாசலம், தன்வந்திரி காவல் நிலையத்தில் எஸ்.பி. வீரவல்லபன் மற்றும் பகுதி காவல் ஆய்வாளா்கள், துணை காவல் ஆய்வாளா்களுடன் பொதுமக்களின் புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தனா்.
போக்குவரத்து மற்றும் ஒழுங்கு பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கே.திரிபாதி, எஸ்.பி.க்கள் செல்வம், மோகன்குமாா் ஆகியோா் போக்குவரத்து சம்பந்தமான குறைகளைக் கேட்டறிந்தனா்.
இதேபோல, காரைக்கால், மாஹே பிராந்தியங்களில் உள்ள காவல் நிலையங்களில் நடைபெற்ற முகாம்களிலும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்று புகாா் மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டனா்.
அந்த வகையில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 113 புகாா் மனுக்கள் பெறப்பட்டு, ஏற்புடைய 86 மனுக்களின் மீது உடனடித் தீா்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். குறைதீா் கூட்டத்தில் 279 போ் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.