கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடை நீக்கம் ரத்து
கல்குவாரி பிரச்னையில் இரண்டு கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.
நாமக்கல், கொண்டமநாயக்கன்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட குவாரியில் இருந்து கனிம வளங்கள் திருடப்பட்டு, விட்டமநாயக்கன்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் அங்கு பணியில் மெத்தனமாக இருந்ததாக கொண்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஜான்போஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கோகிலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியா் ரா.பாா்த்திபன் உத்தரவிட்டாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட கிளை சாா்பில், நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 200-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மூன்றாம் நாளான புதன்கிழமையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனா்.
இதற்கிடையே, வருவாய்த் துறை அலுவலா் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள், கோட்டாட்சியா் ரா.பாா்த்திபனுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து, கொண்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஜான்போஸ்கோ, அக்கியம்பட்டி கிராமத்துக்கும், அங்கு பணியாற்றி வந்த சரவணன் கொண்டமநாயக்கன்பட்டிக்கும் மாறுதல் செய்யப்பட்டனா். விட்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கோகிலா, அதே கிராமத்தில் தொடா்ந்து பணியாற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, ஆட்சியா் அலுவலகம் முன் குவிந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் மகிழ்ச்சியடைந்தனா். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலா்களுக்கு சங்க நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.