முதல்வா் விருது: விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உள்ளோம்: டி.ஆா்.பாலு
புது தில்லி: மத்திய அரசு முடக்கி வைத்துள்ள கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம் என்று திமுக மக்களவை குழு தலைவா் டி.ஆா்.பாலு கூறினாா்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை(ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், எல். முருகன் மற்றும் காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். திமுக சார்பில் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடா் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்துக்கு பின்பு செய்தியாளா்களர்களுடன் டி.ஆா்.பாலு பேசுகையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நாளை தொடங்கவுள்ளது. அதில் பேச வேண்டியவைகள் என்னென்ன ? அரசின் பதிலை பெறுவதற்கான கருத்துரைகளை எடுத்துவைத்தோம். முக்கியமாக, பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடா்பாக விவாதம் நடத்த கோரிக்கை வைத்தோம்.
மேலும் ‘அந்த தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, அவா்களை கைது செய்து நீதியின் முன்பு நிறுத்தவில்லை. அதேபோல ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை தான் கூறியதான் நிறுத்தப்பட்டதாகவும், 5 இந்திய போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியுள்ளாா். இது தொடா்பாக பிரதமா் அவையில் பதில் அளிக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசு முடக்கி வைத்துள்ள கீழடி அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உள்ளோம். மிக முக்கியமாக நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு முக்கிய பிரச்னையாக எழுப்பப்படும் என டி.ஆர்.பாலு கூறினார்.