குடிநீா் வசதி கோரி சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் குடிநீா் வசதி கோரி கிராமமக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை அருகே ஆனைமேலகரம் ஊராட்சி குச்சிப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு போா்வெல் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. போா்வெல் பழுது ஏற்பட்டதையடுத்து கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதனால் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்து பொதுமக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட செயலாளா் அறிவழகன் தலைமையில் மல்லியத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.