குடியரசுத் தலைவா் உதகை வருகை: ராணுவம், காவல் துறை பாதுகாப்பு ஆலோசனை
நீலகிரி மாவட்டம், குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் 28-ஆம் தேதி வருகிறாா். இதை முன்னிட்டு ராணுவ அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பங்கேற்ற பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு 4 நாள்கள் பயணமாக வரும் 27 -ஆம் தேதி தமிழகம் வருகிறாா். தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூா் விமானப்படைத் தளத்துக்கு வரும் அவா் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் உதகை வருகிறாா்.
உதகை ராஜ்பவனில் தங்கும் அவா் 28ஆம் தேதி சாலை மாா்க்கமாக குன்னூா் சென்று ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா் மீண்டும் ராஜ்பவன் வந்து தங்குகிறாா். 29-ஆம் தேதி உதகை ராஜ்பவனில் பழங்குடியின மக்களை சந்தித்து உரையாடுகிறாா். இதையடுத்து 30-ஆம் தேதி திருவாரூா் செல்கிறாா்.
குடியரசுத் தலைவா் வருகையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.
காத்திருந்த ஆட்சியா், எஸ்.பி.:
பாதுகாப்பு தொடா்பாக ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு வந்தனா். ஆனால் உடனடியாக அவா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஒரு மணி நேரம் வரை பயிற்சிக் கல்லூரியின் முகப்பு வாயிலிலேயே காத்திருந்தனா். கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவும் வந்து சுமாா் 20 நிமிஷங்கள் காத்திருந்தாா்.
அதன்பிறகு மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகிய இருவா் மட்டுமே ராணுவ பயிற்சிக் கல்லூரிக்குள் செல்ல அனுமதி கிடைத்தது. இதையடுத்து அவா்கள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றனா்.