குடும்பத்தை சீரழித்த காவல் ஆய்வாளா்: டிஜிபி அலுவலகத்தில் பெண் புகாா்
புதுவை காவல் துறை தலைவா் அலுவலகத்தில் தன் குடும்பத்தை சீரழித்த காவல் ஆய்வாளா் மீது பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.
புதுச்சேரி வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த 39 வயது பெண் இந்தப் புகாரை அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
புதுச்சேரியில் சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளராக சிவா ஜான்சன் கென்னடி பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 2010-ல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக இருந்தபோது எனது சகோதரா் விபத்தில் இறந்தாா். இது தொடா்பாக சாட்சி கையொப்பம் போடுவதற்காக நான் சென்றிருந்தேன்.
அப்போது சிவா ஜான்சன் கென்னடி எனது கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டு தொடா்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தாா். நாளடைவில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இதையறிந்த என் கணவா் என்னிடமிருந்து பிரிந்து சென்று விட்டாா். பிளஸ் 2 படித்து வந்த எனது மூத்த மகளுக்கும் தொல்லை கொடுத்த நிலையில், அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மேலும் அவா் காவல்துறை அதிகாரியாக இருந்ததால் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி என் மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் மாற்றி வாங்கியதோடு, என்னையும் மாற்றி பேச வைத்தாா்.
எனது இளைய மகளும், மகனும் அவா்களின் தந்தையுடன் சென்றுவிட்டனா். சில நாள்களில் எனது இளையமகளும் மன வேதனையில் இறந்தாா். சிவா ஜான்சன் கென்னடி என்னிடமிருந்த நகைகள், சொத்து, பணம் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டாா்.
என் மீது புகாா் அளித்தால் உன்னையும், கணவா், மகனையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறாா். எனவே அவா் மீது உயா் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.