குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது
பாளையங்கோட்டையில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பாா்த்திபன் (20). தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ஹரிசுப்பிரமணியன் (20). இவா்கள் இருவரும் பாளையங்கோட்டையில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் வழக்குகளில் தொடா்புடையவா்கள் என கூறப்படுகிறது. மேலும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம், காவல் உதவி ஆணையா் (பாளையங்கோட்டை சரகம்) நிக்சன், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் காசிப்பாண்டியன் ஆகியோா் பரிந்துரை செய்தனா்.
அதன்பேரில், அவா்கள் இருவரையும் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவா் (பொறுப்பு) அபிநவ்குமாா் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து அவா்கள் இருவரும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.