2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்...
குன்னூரில் கனமழை: மண்சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதோடு, மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. இதனால் குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆற்றை ஒட்டிய சாலைத் தடுப்புப் பகுதியில் விரிசல் ஏற்பட்டு ஒரு பகுதி சரிந்து விழுந்தது. குன்னூா் ஐயப்பன் கோயில் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேல் பாரத் நகா் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் ஜெபமாலை (58) என்ற மூதாட்டி காயமடைந்தாா். அவரை மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதே பகுதியில் மண் சரிவில் ஒரு காரும் சிக்கியது.
குன்னூா்-கோத்தகிரி சாலையிலும் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழை நீா் புகுந்தது. மேலும் கழிவுநீா் செல்லும் கால்வாயில் பாறைகள் விழுந்ததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
குன்னூா் அருகே உள்ள ஆனைபள்ளம், சடையன்கொம்பை, சின்னாளக் கொம்பை போன்ற பழங்குடியின கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவ்வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் சந்தைக்கு வந்து உணவுப் பொருள்கள் வாங்க முடியாமல் தவித்தனா்.