புவனேசுவரத்தில் நவ.29-டிச. 1 வரை டிஜிபிக்கள் மாநாடு: பிரதமா் மோடி, உள்துறை அமைச்...
குமரியில் கொடூரம்: 'கொடுத்த ஆவணங்களை திருப்பித் தரவில்லை' - வழக்கறிஞரை கொன்று எரித்த ஆசாமி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சரல்விளை பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி. இவர் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளர். இவரிடம் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பவர் தனக்குச் சொந்தமான நிலம் தொடர்பான பிரச்னைக்காக நீதிமன்றத்தில் வாதாடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதற்காக சொத்து தொடர்பான ஆவணங்களையும் சில மாதங்களுக்கு முன் வழக்கறிஞர் கேட்டதால் இசக்கிமுத்து கொடுத்திருக்கிறார். அதே சமயம் வழக்கறிஞர் எதிர் தரப்புடன் சேர்ந்து தனக்கு எதிராக செயல்படுவதுபோன்ற சந்தேகம் இசக்கிமுத்துவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது சொத்து தொடர்பான ஆவணங்களை திருப்பித்தரும்படி வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபியிடம் கேட்டிருக்கிறார். இசக்கிமுத்து பலமுறைக் கேட்டும் ஆவணங்களை வழங்காமல் இழுத்தடித்திருக்கிறார் வழக்கறிஞர் கிறிஸ்டோபர். இது இசக்கி முத்துவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி-யை மது அருந்தலாம் என பீமாநகரி பகுதிக்கு அழைத்துள்ளார் இசக்கிமுத்து. அங்குள்ள குளக்கரையில் அமர்ந்து கிறிஸ்டோபர் சோபி-யும் இசக்கி முத்துவும் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது தனது நிலம் சம்பந்தமான ஆவணங்கள் பற்றி இசக்கி முத்து பேசியுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இசக்கிமுத்து ஏற்கனவே தயார வைத்திருந்த அரிவாளால் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி-யை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி-யின் உடலை எரித்துவிட்டார். பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்தார் இசக்கி முத்து. ஆரல்வாய்மொழி போலீஸார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்ததாக, காவல் நிலையத்தில் சரண் அடைந்த இசக்கிமுத்து வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். சொத்து சம்பந்தமான ஆவணங்களை கேட்டபோது, `வழக்கறிஞர் என்பதால் என்னை எதுவும் செய்யமுடியாது, நீ என்னிடம் பிரச்னை செய்தால் உன் குடும்பத்தையே அழித்து விடுவேன்' என வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி மிரட்டியதாகவும், என் குடும்பத்தை நிம்மதி இல்லாமல் செய்ததால் வழக்கறிஞரை கொலையை செய்ததாகவும் இசக்கிமுத்து தெரிவித்துள்ளார்" என்றனர். வழக்கறிஞர் வெட்டி கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதாக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.