மகா தீபம்: ஜோதியாய் எழுந்தருளிய அண்ணாமலையார்... பக்தி முழக்கத்தில் அதிரும் திருவ...
குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்! தென்காசி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்
தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழையால் குற்றாலம் அருவிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நெல்லையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இதையும் படிக்க | செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு: முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை
அதேபோல தென்காசி மாவட்டத்திலும் நேற்று முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் நேற்று முதலே அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் தடுப்புகள் உடைந்து பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் குளம் கரையில் உடைப்பு ஏற்பட்டு செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சராசரியாக 18 முதல் 19 செமீ மழை பெய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.