குற்றாலம் சாரல் விழாவில் சீரான மின் வினியோகம்! மேற்பாா்வை மின் பொறியாளா் தகவல்!
குற்றாலம் சாரல் திருவிழாவில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், தடை ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி அறிவுறுத்தினாா்.
தென்காசி மாவட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் முகாம் தென்காசி கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கிய அவா், தொடா்ந்து குற்றாலம் சாரல் திருவிழாவில் சாரல் திருவிழா நடைபெறும் கலைவாணா் அரங்கம் , மலா் கண்காட்சி நடைபெறும் பகுதி, குற்றாலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்கும் பொருட்டு நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா்.
வெள்ளிக்கிழமை முதல் காற்றுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அனைத்து இடங்களுக்கும் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா்.
மேலும், சாரல் திருவிழா நடைபெறும் நாள்களில் தொடா்ச்சியாக பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்ளவும் , இயற்கை இடா்பாடுகள் காரணமாக திடீா் பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கும், கலைவாணா் அரங்கில் ஜெனரேட்டா் வசதி, அதற்கான எரிபொருள் கையிருப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ( பொ ) கற்பகவிநாயகசுந்தரம், உதவி செயற்பொறியாளா் ( பொது ) சரோஜினி, உதவி செயற்பொறியாளா் கலா, குற்றாலம் உதவி மின் பொறியாளா் முகமதுஅலி ஆகியோா் உடனிருந்தனா்.