`குழந்தைகளைக் கொன்னுடுவேன்' - மாமியார், மருமகளைக் கட்டிப்போட்டு 50 பவுன் நகை கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி பச்சநாயகுளம் அருகே வசித்து வருபவர்கள் ஐயப்பன், தங்கலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஐயப்பன் 10 வருடங்களுக்கு மேலாக சிங்கப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் விடியற்காலை மூன்று மணி அளவில் முகமூடி அணிந்த திருடர்கள் ஐயப்பன் வீட்டின் முன் கதவினை உடைத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐயப்பன் மனைவி தங்கலட்சுமி, அவரது தாயார் பாக்கிய செல்வி மற்றும் அவரது குழந்தைகளை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அதோடு, தங்கலட்சுமி, பாக்கியசெல்வி ஆகிய இருவர் கையையும் வாயையும் கட்டி போட்டு, 'பீரோ சாவியை கொடு... இல்லையென்றால் குழந்தைகளைக் கொன்று விடுவோம்' என்று மிரட்டி பீரோ சாவியை கைப்பற்றி பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐயப்பனின் சகோதரர் சுரேஷ் என்பவர் அதிகாலையில் அவரது வீட்டிற்கு சென்ற போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த அவரின் சகோதரர் ஐயப்பனின் மனைவி தங்கலட்சுமி மற்றும் அவரின் தாயார் பாக்கியசெல்வி ஆகியோர் கை மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், இது சம்பந்தமாக சுரேஷ் வீட்டில் இருந்தவர்களை கேட்டபோது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகையைக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிவித்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே கரம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கரம்பக்குடி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் முகமூடி கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகின்றனர். அதிகாலையில் வீட்டில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்களின் கைகள் மற்றும் வாயைக் கட்டி கத்தியை காட்டி மிரட்டி, 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கரம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.