``திருமணத்திற்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன" - முன்னாள் ...
கேரள அரசு விருது: "நானும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவன்தான்" - சிறந்த நடிகர் விருது பெறும் மம்மூட்டி
கேரள மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் சினிமா விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நடிகருக்கான விருது மம்மூட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரமயுகம் சினிமாவில் கொடுமண் போற்றி மற்றும் சாத்தன் ஆகிய இரு கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக மம்மூட்டிக்குச் சிறந்த நடிப்புக்காக மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது மம்மூட்டிக்கு வழங்கப்படுவது இது 8-வது முறையாகும். சிறந்த நடிகைக்கான விருது ஷம்லா ஹம்சா-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த சினிமாவுக்கான விருது கொடைக்கானல் குணா குகையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் சினிமாவுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது மஞ்சும்மல் பாய்ஸ் சினிமாவை இயக்கிய சிதம்பரத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கலைகளை உள்ளடக்கிய சினிமாவுக்கான விருது பிரேமலு சினிமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

8-வது முறையாக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது குறித்து நடிகர் மம்மூட்டி கூறுகையில், "என்னுடன் விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். ஆஷிப் அலிக்கும், டொவினோ தாமசுக்கும் வாழ்த்துகள்.
சிறந்த நடிகையாக தேர்வாகியுள்ள ஷம்லா ஹம்ஸாவுக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள செளபின் ஸாஹிர், சித்தார்த் பரதன் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.
என்னுடன் பயணிக்கும் இசை அமைப்பாளர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ரோனக்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

மஞ்சும்மல் பாய்ஸ் டீமுக்கும், அமல் நீரட் டீமுக்கும் வாழ்த்துகள். இந்த முறை விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள். விருது கிடைக்காதவர்களுக்கு அடுத்தமுறை கிடைக்கும். சினிமாக்களில் நடிப்பது விருதை எதிர்பார்த்து அல்ல. அதெல்லாம் அதன் வழியில் நிகழும்.
பிரமயுகம் சினிமாவின் கதையும், கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தன. இது போட்டி அல்ல. நம்முடையது ஒரு யாத்திரை அல்லவா, உடன் பயணிப்பவர்கள் நிறையபேர் உண்டு. அவர்களையும் ஒன்றாக இணைப்போம்.
நான் பழைய தலைமுறை அல்ல. நானும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவன்தான். அனைவருக்கும் நன்றி" என்றார்.

















