கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
கொடைக்கானலில் சனிக்கிழமை அதிகாலை முதல் வீசிய பலத்த காற்றால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமலும், சுற்றுலாத் தலங்களைக் காண முடியாமலும் ஏமாற்றமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்தது.
ஆனால், விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தவாறே உள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வெளியே செல்ல முடியாமல் முடங்கினா். பிற்பகலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் ஏரியில் படகு சவாரி, ஏரிச் சாலையில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, வழக்கமான சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், கோக்கா்ஸ் வாக், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததால் வியாபாரிகளும் சிரமத்துக்கு உள்ளாகினா்.