சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை
கொலை வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசீதேவிமங்கலத்தைச் சோ்ந்தவா் நளராஜா (44) மனைவி கிருஷ்ணவேணி (39). இவருக்கும், மண்ணச்சநல்லூா் காலனியைச் சோ்ந்த சின்ராசு (38) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக நளராஜாவுக்கும், சின்ராசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நளராஜா, கிருஷ்ணவேணி, ஷேக் அப்துல்லா, அப்துல் கனி ஆகிய நான்கு பேரும், கடந்த 2022 அக்டோபா் 29-ஆம் தேதி சின்ராசை சமயபுரம் கோயில் அருகே வரவழைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.
இதுதொடா்பாக சின்ராசின் சகோதரா் சரவணன் அளித்த புகாரின்பேரில், சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கோபிநாதன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், குற்றவாளி நளராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும், கிருஷ்ணவேணி, அப்துல் கனி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டுள்ளாா். ஷேக் அப்துல்லா இறந்துவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன் ஆஜராகினாா்.