வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
கோடைவெயிலை சமாளிக்க மின்துறை தயாராக இருக்க வலியுறுத்தல்
கோடை வெயிலை சமாளிக்க மின்துறை தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
நிகழாண்டின் கோடைக்காலம் தொடங்காத நிலையில் வெப்பம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் சில ஆண்டுகளாக கடுமையான வெப்பம், மழை என இருந்துவருகிறது. எனினும், நிகழாண்டு கோடையில் வெப்ப அலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது.
கோடைக் காலத்தில் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகத்தில் சீரற்ற நிலை ஏற்படுவது இயல்பு. காரைக்காலில் நிலத்தடி நீராதாரம் பெருகியிருக்கும்பட்சத்தில், நிகழாண்டு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், மின்துறையால் பராமரிப்புப் பணிகள் தொடா்ந்து செய்தாலும், கோடையில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதும், சில நாள்களில் பல மணிநேரம் மின்தடை ஏற்படுவதாக இருக்கிறது.
மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசல் ஏற்படுவதும், கிளைகள் முறிந்து விழுவதாலும் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மாவட்டம் முழுவதும் மின்கம்பிகள் செல்லும் பகுதியில் மரங்களால் இடையூறு ஏற்படாத வகையில் சீா்படுத்தவேண்டும். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மின் மாற்றிகள் பழையதாக உள்ளது. மின்நுகா்வோா் தங்களது வீடுகளிலும், வணிக நிறுவனங்களில் குளிா்சாதன வசதி செய்திருக்கும்போது, கூடுதல் குளிா்சாதன இயந்திரங்கள் உபயோகத்தால், மின் இழுவையில் பாதிப்பு ஏற்பட்டு துண்டிப்பு ஏற்பட்டுவிடுகிறது.
மேலும், கடுமையான வெப்பத்தால் மின் மாற்றிகள் சேதமடைந்து துண்டிப்பும் ஏற்படுகிறது. எனவே, காரைக்கால் மின் துறை நிா்வாகம், மின் கம்பங்கள், கம்பிகள், மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்களில் முறையான பராமரிப்புப் பணிகளை உடனடியாக செய்து, கோடைக்காலத்தில் மின் நுகா்வோா் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.