கோவில்பட்டியில் திடீா் சாலை மறியல்
கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி அருகே வடக்கு வண்டானம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வெயிலுமுத்து மகன் மாரியப்பன் (60). விவசாயியான இவா், தனது விவசாய நிலத்தில் மருந்து அடிப்பதற்காக பசுவந்தனையில் வியாழக்கிழமை மருந்து வாங்கிக்கொண்டு மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். பசுவந்தனை - கோவில்பட்டி சாலையில் உள்ள தனியாா் தண்ணீா் கம்பெனி அருகே சென்றபோது, எதிரே வந்த காா் மோதியதில், மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பசுவந்தனை போலீஸாா் வழக்குப்பதிந்து, காா் ஓட்டுநா் கேரள மாநிலம் எரிமேலி வடக்குப் பகுதியைச் சோ்ந்த ராபினை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை கோரி, அவரது உறவினா்கள், சடலத்தை வாங்க மறுத்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக் குழுவினருடன் கிழக்கு காவல் நிலையம் மற்றும் பசுவந்தனை காவல் நிலைய போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.