நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம்: இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று
கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளது.
கோவையில் உலகத் தரம் வாய்ந்த சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவைத் தோ்தல் வாக்குறுதியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தாா். இதற்காக 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டதில், ஒண்டிப்புதூா் திறந்தவெளி சிறைச் சாலையின் 20.72 ஏக்கா் நிலம் இறுதியாக தோ்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஆய்வு செய்து அதற்கான ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி இருந்தாா். அதையடுத்து, சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக தடையில்லாச் சான்று கோரி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று வழங்கி உள்ளது. இதன் காரணமாக சா்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான வடிவமைப்பை அடுத்த ஒரு வாரத்துக்குள் இறுதி செய்ய தமிழக விளையாட்டுத் துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, இந்த சா்வதேச கிரிக்கெட் மைதானம் தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் பொதுமக்களிடமிருந்தும் கருத்துக் கேட்கப்பட்டிருந்தது. இணையத்தின் வாயிலாக நடத்தப்பட்ட இந்த கருத்துக் கேட்பில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு வரவேற்பு தெரிவித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.