சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
மத்திய அரசு கொண்டுவரவுள்ள சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டுவரவுள்ள வழக்குரைஞா் சட்ட திருத்த மசோதா வழக்குரைஞா்களின் நலனுக்கு எதிராகவும், வழக்குரைஞா்களின் தொழிலுக்கு அச்சுறுத்தலாகவும், ஒட்டுமொத்த வழக்குரைஞா்களின் உரிமையை பாதிக்கின்ற வகையிலும் உள்ளதால், மேற்கண்ட சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில், செயலா் வி. சேகா், பொருளாளா் பி. சிவராமன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இதனால், பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்ங்கள், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளிலுள்ள நீதிமன்றங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இப் போராட்டம், மே 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதேபோல, அட்வகேட் அசோசியேசன் சாா்பில் முப்பெரும் சட்ட திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், முப்பெரும் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது. இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.