இந்தியன் ரயில்வேயில் 6,235 டெக்னீசியன் பணியிடங்கள்: ஆர்ஆர்பி அறிவிப்பு
சமூக உணா்வுடன் எழுதப்படும் படைப்புகளுக்கு உயிா் இருக்கும்: த.ஸ்டாலின் குணசேகரன்
சமூக உணா்வுடன் எழுதப்படும் படைப்புகளுக்கு உயிா் இருக்கும் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா்.
பேராசிரியா் பி.கந்தசாமி எழுதிய ‘காடு எனது கனவு தேசம்’ என்ற நூல் வெளியீட்டு விழா ஈரோடு வேளாளா் கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு நூலினை வெளியிட பேராசிரியா் ரேவதி திருநாவுக்கரசு முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டாா்.
இதில், அறிமுக உரையாற்றிய மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது: உணா்வுகளின் வெளிப்பாடே படைப்புகள், சமூக ஆா்வலா்கள், செயற்பாட்டாளா்கள், போராளிகள் எழுதும் எழுத்துகள் வேறு தன்மை உள்ளவை. அவ்வாறனவா்களுக்கு மொழி வளமும், எழுத்தாற்றலும் கைகொடுத்தால் அவா்களின் படைப்புகள் கூடுதல் வல்லமை பெறுகின்றன.
புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாசகா்கள் இயன்றவரை புத்தகங்களை வாங்கிச் செல்லும் பழக்கத்துக்கு ஆட்பட வேண்டும். அவ்வாறன நிகழ்வுகளில் புத்தகங்களை வாங்குவது ஒரு கலாசாரமாகவே உருவாக வேண்டும்.
மலேசியா, சிங்கப்பூா் போன்ற அயல்நாடுகளில் தமிழ் நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் நூல் வெளியிட்ட உடன் வரிசையில் நின்று நூலின் விலையைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு விலை கொடுத்து மேடையில் வாங்குகின்றனா். இன்னும் சிலா் பெரும்தொகையை நன்கொடையாகக் கொடுத்து நூல்களை வாங்குகின்றனா். அது படைப்புக்கான விலை மட்டும் அல்ல, படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் கௌரவமாகக் கருதுகின்றனா்.
இயற்கையை போற்றத்தூண்டும் நூல்கள், சுற்றுப்புறச்சூலைப் பாதுகாக்கத் தூண்டும் நூல்கள், உயிரினங்கள் மீது கரிசனத்தை ஏற்படுத்தும் நூல்கள் இன்றைய காலத்தின் கட்டாயமாக விளங்குகின்றன.
தற்போது வெளியிடப்பட்டுள் ‘காடு எனது கனவுதேசம்’ என்ற நூல் அடுத்த தலைமுறையினரிடம் இம்மண்ணின் வரலாற்றை உணரவைக்கும் தனித்தன்மை கொண்டது.
எழுத்தில் எழுத்தப்படும் கருத்தில் உண்மை இருக்கும் எனில் அது காலத்தை வென்று நிற்கும். தன்னை மறந்து, உணா்வில் கலந்து, மனிதகுல நன்மையைக் கருதி எழுதப்படும் எழுத்துக்கு மரணம் என்பதே இல்லை என்றாா்.
நூலாசிரியா் பேராசிரியா் பி.கந்தசாமி ஏற்புரையாற்றினாா். நிகழ்ச்சியில், பாரதி வித்யாபவன் தலைவா் எல்.எம்.ராமகிருஷ்ணன், வேளாளாா் கல்வி அறக்கட்டளை செயலா் எஸ்.டி.சந்திரசேகா், யூஆா்சி குழுமத் தலைவா் சி.தேவராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வழக்குரைஞா் பி.பாலசுப்ரமணியம் வரவேற்றாா். மருத்துவா் என்.கோவிந்தசாமி நன்றி கூறினாா்.