சல்மான் கான்: `மன்னிப்பு அல்லது ரூ.5 கோடி' - விடாமல் துரத்தும் கொலை மிரட்டல்கள்
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது. அதுவும் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் அல்லது அவனது பெயரை சொல்லி சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தற்போது மீண்டும் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் பெயரில் அக்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை டிராஃபிக் போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்ஆப் நம்பருக்கு வந்துள்ள அக்கொலை மிரட்டலில், சல்மான் கான் உயிரோடு இருக்கவேண்டுமானால் 10 நாட்களுக்குள் ரூ.5 கோடி கொடுக்கவேண்டும். அல்லது எங்களது கோயிலுக்கு சென்று மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்கு சல்மான் கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பிஷ்னோய் இன மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் சல்மான் கான் இவ்விவகாரத்தில் எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் தனது பாதுகாப்பை மட்டும் பலப்படுத்தி வருகிறார். சல்மான் கானின் தந்தை சலீம் கான் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், `சல்மான் கான் ராஜஸ்தானில் மான்களை வேட்டையாடவில்லை’ என்றும், `செய்யாத தவறுக்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும்?’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனாலும் இவ்விவகாரத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து சல்மான் கானுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறான். இதற்கு முன்பு சல்மான் கான் வீட்டின் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதோடு சல்மான் கானின் நெருங்கிய நண்பர் பாபா சித்திக்கையும் கொலை செய்தனர். இதனால் சல்மான் கான் எப்போதும் குண்டு துளைக்காத காரில்தான் வெளியில் சென்று கொண்டிருக்கிறார். தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தலையும் மீறி சல்மான் கான் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...