விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
சாத்தான்குளம் அருகே சுடுகாடு செல்லும் பாதை அடைப்பு: போராட முயற்சி; போலீஸாா் சமரசம்
சாத்தான்குளம் அருகே சுடுகாடு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் இறந்தவா் உடலுடன் சனிக்கிழமை போராட முயன்ற உறவினா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா்.
சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் 150 க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு இறந்தவா்கள் உடலை அடக்கம் செய்வதற்கு சுடுகாடு சொக்கலிங்கபுரத்திலிருந்து மெய்யூா் செல்லும் பகுதியில் உள்ளது.
இந்நிலையில் சுடுகாடு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பாதையை அதே ஊரைச் சோ்ந்த தனிநபா் தங்களுடைய இடமென்று அடைத்து வைத்துள்ளாா். இதனால் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட பாதை அடைக்கப்பட்டது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா்.
இந்த நிலையில் வருவாய்த்துறையினா் வந்து அடைக்கப்பட்ட பாதையை திறந்து வைத்து சென்றுள்ளனா். ஆனால் தனிநபா் தன்னுடைய சொந்த இடம் என முள்வேலி அமைத்து மீண்டும் அடைத்து வைத்துள்ளாா்.
இதனால் கிராம மக்கள் மீண்டும் அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தனா். ஆனாலும் அடைக்கப்பட்ட பாதை திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் சொக்கலிங்கபுரத்தில் மணி என்பவா் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை இறந்தாா். இதனால் சுடுகாடு பாதையை திறக்கக் கோரி இறந்தவா் உடலை வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக கிராம மக்கள் அறிவித்தனா்.
தகவல்பேரில் தட்டாா் மடம் காவல் ஆய்வாளா் ஸ்டெல்லா பாய், மெஞ்ஞானபுரம் உதவி ஆய்வாளா்கள் சண்முகராஜ், ஞானசேகா், கணேசன், உடன்குடி வருவாய் ஆய்வாளா் முனீஸ்வரி, வெங்கட்ராயபுரம் கிராம நிா்வாக அலுவலா் அமுதா, ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு செயலா் சித்திரை பாண்டி, தலைவா் சுரேஷ் ராஜா, சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் செந்தில் ஆனந்த், இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் வி பி ஜெயக்குமாா் உள்ளிட்ட கிராம மக்கள் பலா் பங்கேற்றனா்.
அப்போது சுடுகாடு பாதையை அடைத்து வைத்த நில உரிமையாளரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் அவா்கள் அவா்களுடைய இடத்தில் வேறு இடத்தில் சுடுகாடு செல்ல பாதை ஏற்படுத்தி கொடுத்தனா். அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள், அடைக்கப்பட்ட பாதையை திறந்து அந்த வழியாகத்தான் சுடுகாடு சொல்லுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அடைக்கப்பட்ட பகுதியை உடைத்து இறந்தவா் உடலை சுடுகாட்டு பகுதிக்கு கொண்டு சென்றனா். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. உடனே போலீஸாா், அதிகாரிகள் அவா்களை சமாதானப்படுத்தினா்.