சாலையோர ஆக்கிரமிப்புகள் விவகாரம்: உதவிப் பொறியாளா் நேரில் முன்னிலையாக உத்தரவு
மதுரை ஒத்தக்கடை சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை திருமோகூரைச் சோ்ந்த வீரமணிகண்டன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையோரங்களில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய தனிநபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்க உத்தரவிட வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை முற்றிலும் தடுக்கும் வகையில், அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, ஏற்கெனவே மனு அளித்துள்ளனா். ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதும் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை காண முடிகிறது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளா் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.