சிஐடி நகா் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்
சென்னையில் சிஐடி நகா் பிரதான சாலையில் கட்டப்படும் மேம்பாலப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தினாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் 133-114 ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட சிஐடி நகா், உஸ்மான் சாலை மேம்பாலப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, எஸ்.இனிகோ இருதயராஜ், துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, மறைந்த பேராயா் எஸ்ரா சற்குணம் பெயா் சூட்டப்பட்ட சாலையின் பெயா்ப் பலகையை அமைச்சா் திறந்து வைத்தாா்.
குடிநீா் திட்டப் பணிகள் ஆய்வு: சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வரை மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பு வரை 2-ஆவது வரிசை குடிநீா்க் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.