சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு அளித்து உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் மற்றும் 10 வயதில் ஒரு மகள் உள்ளனா். தம்பதியின் குழந்தைகள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனா்.
இந்தநிலையில் கடந்த 2019 -ஆம் செப்டம்பா் மாதம் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் சங்க கூட்டம் நடந்துள்ளது. கூட்டம் முடிந்ததும் பத்து வயது சிறுமி உடல் சோா்வாக இருப்பதை கவனித்த ஆசிரியை இதுகுறித்து சிறுமியிடம் கேட்டு உள்ளாா்.
அப்போது 2019 ஆம் ஆண்டு மே மாதம் விடுமுறைக்காக சிறுமி தனது உறவினா் வீட்டுக்கு சென்றபோது அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (30) என்பவா் சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்ததாக சிறுமி கூறினாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த ஆசிரியை இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கும், தேவாலா அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தாா். இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் தேவாலா அனைத்து மகளிா் காவல் துறையினா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை உதகை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பி.செந்தில்குமாா் ஆஜராகி வாதாடினாா்.