சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், சு.கொல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (57). இவா், வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கடந்த 12.4.2022 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கு விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் சனிக்கிழமை இறுதிகட்ட விசாரணைக்கு வந்தது. இதில், கலியமூா்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா, கலியமூா்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.ஒரு லட்சம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் கலியமூா்த்தியை பலத்த பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் காந்திமதி ஆஜராகினாா்.