`சிறையில் கைதி சித்ரவதை' - பாதுகாப்பு அதிகாரி உட்பட மேலும் 11 காவலர்கள் சஸ்பெண்ட்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்த சிவக்குமாரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யின் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தியதோடு, டி.ஐ.ஜி வீட்டில் இருந்த ரூ.4.25 லட்சம் பணம் காணாமல் போனதற்கும் சிவக்குமார் மீது சந்தேகப்பட்டு அவரைக் கடுமையாகத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, சிவக்குமாரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நேரில் விசாரணை நடத்தினார். இவரது அறிக்கையின் அடிப்படையில் கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையின் தனி அறையில் 100 நாள்கள் அடைக்கப்பட்டு சித்ரவதைச் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சென்னை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 12-ம் தேதி, சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட கைதி சிவக்குமாரிடமும், மறுநாள் வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடமும் நேரில் விசாரணை நடத்தினார் எஸ்.பி வினோத் சாந்தாராம்.
இதையடுத்து, சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் சென்னை புழல்-2 சிறைக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். சிறைத்துறை டி.ஜி.பி-யும் வேலூர் சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 21-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, `கைதியை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஐ.ஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர் தயாள்.
இந்த நிலையில், கைதி தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய சிறைத்துறை டி.ஐ.ஜி-யின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ராஜு, சிறைக் காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி, சரஸ்வதி, செல்வி மற்றும் சிறைக் காவலாளிகள் சுரேஷ், சேது ஆகிய மேலும் 11 பேரையும் இப்போது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர் தயாள்.