சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்கக் கோரி எம்எல்ஏ மனு
செங்கோட்டை- சென்னை சிலம்பு விரைவு ரயிலை தினமும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரை ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளா் எல்.என்.ராவிடம் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ மனு அளித்தாா்.
அதன் விவரம்:
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் நலன் கருதி செங்கோட்டை - சென்னை சிலம்பு விரைவு ரயிலை தினமும் இயக்க வேண்டும். செங்கோட்டை-திருநெல்வேலி ரயிலில் கூடுதல் பெட்டிகளும், செங்கோட்டை - ஈரோடு, செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லா மற்றும் முன்பதிவு பெட்டிகளையும் இணைக்க வேண்டும், தென்காசி வழியாக நெல்லை - கொல்லம் பகல் நேரடி ரயில்களை இயக்க வேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்காசி சங்கரன்கோவில் வழியாக சென்னை,பெங்களூரு,மும்பை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். சங்கரன்கோவில், தென்காசி வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். சங்கரன்கோவில் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாரம் இருமுறை நிரந்தர ரயில் இயக்க வேண்டும். மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலை குருவாயூா் விரைவு ரயிலுக்கு இணைப்பு ரயிலாக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை தோறும் சங்கரன்கோவில் வழியாக திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலை தொடா்ந்து இயக்க வேண்டும். கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும், கீழப்புலியூா், பாவூா்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, திருநெல்வேலி நகரம் ரயில் நிலையங்களின் நடைமேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும். தென்காசியில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தி தென்காசியை ரயில் முனையமாக மாற்ற வேண்டும்.
கீழப்புலியூரில் இருந்து கடையநல்லூா் செல்லும் வகையில் புறவழி ரயில்பாதை அமைக்க வேண்டும். தென்காசி - செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும். தென்காசி - பகவதிபுரம் இடையே ரயில்களின் வேகத்தை மணிக்கு 110 கி.மீ. ஆக அதிகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
மனு அளிக்கும்போது, ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் பாண்டியராஜா, சங்கரன்கோவில் நகர திமுக செயலா் மு.பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.