`சிவசேனா அமைச்சர்கள் கோரிக்கை நிராகரிப்பு' - பட்னாவிஸை புகழும் உத்தவ் தாக்கரே... பின்னனி என்ன?
மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே அதிகாரப்போட்டி நிலவுகிறது. முந்தைய ஏக்நாத் ஷிண்டே அரசு எடுத்த முக்கிய முடிவுகளை தற்போதைய முதலவர் தேவேந்திர பட்னாவிஸ் மறு ஆய்வு செய்து வருகிறார். இது ஏக்நாத் ஷிண்டே-க்கு கடும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அமைச்சர்கள் தங்களுக்கு பி.ஏ.நியமிக்க முதல்வரின் பார்வைக்கு தங்களுக்கு விருப்பமான அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரை செய்திருந்தனர்.ஆனால் 16 பரிந்துரையில் 12 பரிந்துரைகளை முதல்வர் நிராகரித்துவிட்டார்.
இதுவும் சிவசேனா அமைச்சர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சர்களின் உதவியாளர்கள் புரோக்கர்களாகவும், பணம் வசூலிப்பவர்களாகவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேவேந்திர பட்னாவிஸின் இந்த நடவடிக்கையை உத்தவ் தாக்கரே கட்சி வெகுவாக பாராட்டி இருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், "அமைச்சர்களின் அலுவலகத்தில் ஊழியர்களை நியமிக்கும் விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உறுதியுடன் இருந்தது பாராட்டத்தக்கது. இதன் மூலம் பேரம் பேசுபவர்கள் மற்றும் புரோக்கர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்த போது ஊழல் மலிந்து காணப்பட்டது. அரசியல் சாக்கடையாக இருந்தது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கவுன்சிலர்களை விலைக்கு வாங்க நிதி வசூலிக்கப்பட்டது.

மும்பை மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையம், மாநில சாலை போக்குவரத்து கழகம், மாநில வீட்டு வசதி வாரியத்தை கூட ஊழல் விட்டு வைக்கவில்லை. பணம் வசூலிக்கும் ஒருவர் 10 ஆயிரம் கோடி ரூபாயுடன் துபாய்க்கு தப்பி ஓடிவிட்டார். இது போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செயல்படுவது பாராட்டத்தக்கது. அமைச்சர்கள் தங்களுக்காக பரிந்துரை செய்த தனி உதவியாளர், தனி செயலாளர்கள் தொடர்பான பரிந்துரையை முதல்வர் பட்னாவிஸ் நிராகரித்துள்ளார். பிரான்ஸ் நிறுவனம் சிஸ்ட்ரா மெட்ரோ ரயில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டதற்கு பணம் கேட்டதற்கு, கமிஷன் கொடுத்தால்தான் பில்லுக்கான பணத்தை கொடுப்போம் என்று கூறி கமிஷனை மிரட்டி வாங்கி இருக்கின்றனர்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவசேனாவை இரண்டாக உடைத்ததில் தேவேந்திரபட்னாவிஸ் முக்கிய பங்கு வகித்ததாக உத்தவ் தாக்கரே பல முறை தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அவரது பத்திரிகை பட்னாவிஸை பாராட்டி இருக்கிறது.