சீா்காழியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
சீா்காழி பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்கக் கோரி, அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 8.42 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதை கண்டித்தும், சீரமைப்புப் பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வலியுறுத்தியும் அதிமுகவினா் பேருந்து நிலைய வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் இ. மாா்கோனி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ சந்திரமோகன், மாவட்ட நிா்வாகி பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சீா்காழி நகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு அலுவலா்கள் கையூட்டு கேட்பதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து நிறைவேற்றவும், அனைத்து வாா்டுகளிலும் குடிநீா், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா, பொறியாளா் கிருபாகரன் ஆகியோா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மேற்கண்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜேஷ், ரமாமணி, நகர பொருளாளா் மதிவாணன், ஊராட்சித் தலைவா் மாலினி, நகர மகளிா் அணி செயலாளா் லட்சுமி உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் தெரிவித்த ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளா் இ. மாா்கோனி, ‘நிறுத்தப்பட்டுள்ள சீா்காழி பேருந்து நிலைய சீரமைப்பு பணியை விரைவில் தொடங்கவில்லையெனில் அதிமுக மாவட்டச் செயலாளா் பவுன்ராஜ் தலைமையில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்றாா்.