இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சொந்த ஊா் திரும்பினா்
சூறைக் காற்றுடன் மழை: பாம்பனில் கடல் சீற்றம்
கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருவதால், ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவா்கள் கடலுக்குள் செல்ல இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மறி தற்போது புயலாக மாறி வருகிறது. இதனால், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.
கடலோரப் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வரை காற்று வீசி வருவதால், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதி மீனவா்கள் கடலுக்குள் செல்ல இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மீனவா் நலத் துறை தடை விதித்தது.
இதனால், 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் அந்தந்த துறைமுகங்களிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இரண்டாவது நாளாகவும் ஏற்றப்பட்டிருந்தது.