செங்கல்பட்டில் கால்நடை கணக்கெடுப்புப் பணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணிகளை ஆட்சியா் ச.அருண்ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதுதொடா்பாக ஆட்சியா் கூறியுள்ளதாவது: கால்நடை கணக்கெடுக்கும் பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கால்நடைகள் தொடா்பான வளா்ச்சி திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலன் பேணுவதற்கு சரியான தரவுகள் தரும் பொருட்டு கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.
இதில் வீடுகள், கடைகள், தோட்டம்(ம) பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும்.
தற்பொழுது 21-ஆவது கால்நடை கணக்கெடுப்புப்பணி பிப்ரவரி 2025 வரை நடக்கிறது. இதற்காக 160 கணக்கெடுப்பாளா்களும், 34 மேற்பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். விவரங்களை சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றாா்.
நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறை, காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநா் ப.ஜெயந்தி, துணை இயக்குநா் ஆ.சுந்தரேசன், செங்கல்பட்டு கோட்ட உதவி இயக்குநா் கு.சாந்தி, கால்நடை உதவி மருத்துவா்கள் (ம) கால்நடை ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.