செய்திகள் :

செங்கோட்டையன்: அதிருப்தி, டெல்லி பயணம், ஓபிஎஸ் & டிடிவி சந்திப்பு, நீக்கம் - என்னென்ன நடந்தன?

post image

அதிமுகவில் இருந்து நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.

செங்கோட்டையன் அதிமுக கட்சியில் சூப்பர் சீனியர் இவர். மேலும், அடுத்த ஆண்டு, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இவரது நீக்கம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நீக்கத்திற்கு முன், என்னென்ன நடந்தது? எப்படி செங்கோட்டையன் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உறவில் விரிசல் தொடங்கியது? என்பதை டைம்லைனில் இங்கே பார்ப்போம்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம்
அத்திக்கடவு-அவிநாசி திட்டம்

பிப்ரவரி 9, 2025:

'உரிய மதிப்பும், மரியாதையும் தரப்படுவதில்லை' என்கிற செங்கோட்டையனின் தொடர் மனக்குமுறல், கடந்த பிப்ரவரி 9-ம் தேதிதான் வெட்ட வெளிச்சமானது.

அன்று அத்திக்கடவு – அவநாசி திட்டக்குழு சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஈரோடு மாவட்டம் அன்னூரில் பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவரது மாவட்டத்தில் நடந்த கட்சியின் முக்கிய விழாவில் செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து, அந்த விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை... அதனால் தான், விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் சர்ச்சைகளுக்குப் பதிலளித்தார்.

செங்கோட்டையனின் இந்தப் பதிலுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார் டி.டி.வி தினகரன். இந்த ஆதரவு அதிமுகவிற்குள் குழப்பத்தைக் கிளப்பியது.

பிப்ரவரி 12, 2025

ஈரோடு லக்கம்பட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமி படத்திற்கு இணையாக செங்கோட்டையனின் படமும் வைக்கப்பட்டிருந்தது.

இது வழக்கத்திற்கு மாறானது. எப்போதும் உள்ளூர் நிர்வாகிகளின் படங்கள் சிறியதாகவே வைக்கப்பட்டிருக்கும். அதனால், செங்கோட்டையனின் இந்தச் செயல் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட்டது.

கூடவே, அந்த விழாவில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை செங்கோட்டையன் குறிப்பிடவேவில்லை. ஒரே ஒரு முறை அதிமுக பொது செயலாளர் என்று கூறியப்போதும், பழனிசாமியின் பெயரை கூறவே இல்லை.

அன்று செங்கோட்டையனின் வீட்டில் அதிமுக நிர்வாகிகளின் சந்திப்பும் நடைபெற்றது.

வரவேற்பு விழா
வரவேற்பு விழா

மார்ச் 10, 2025

இந்த விவகாரங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மகன் திருமண வரவேற்பு நடந்தது. அந்த விழாவில் 'பழனிசாமி - செங்கோட்டையன் சந்திப்பு நடக்குமா?' என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், அன்று அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. செங்கோட்டையன் மாலை 4 மணியளவில் விழாவில் கலந்துகொண்டு செல்ல, பழனிசாமி 5 மணிக்கு மேல் விழாவில் கலந்துகொண்டார்.

மார்ச் 14, 2025

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர், சட்டபேரவை வளாகத்தில் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை.

மார்ச் 15, 2025

ஆனால், அதற்கு அடுத்த நாளே, வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் தனியாகச் சந்தித்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் அப்பாவுவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றிருந்தப்போது, செங்கோட்டையன் - அப்பாவு சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.

மார்ச் 17, 2025

அப்பாவுவின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது. இதிலும் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை.

ஆனால், அந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், சட்டமன்றத்திற்குள்ளேயே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் செங்கோட்டையனைச் சமாதனம் செய்ய முயற்சித்தைக் காண முடிந்தது.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

மார்ச் 25, 2025

டெல்லியில் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து இருந்தனர்.

மார்ச் 29, 2025

இதையடுத்து, அடுத்த நான்கு நாள்களிலேயே செங்கோட்டையனும் டெல்லிக்குப் பயணமானார்... அமித்ஷாவைச் சந்தித்தார்.

அடுத்த சில மாதங்கள், சற்று சைலண்ட் மோடில் இருந்த செங்கோட்டையன், மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் தனது நகர்வுகளைத் தொடங்கியுள்ளார். இடையில், பழனிசாமி ஈரோடு சென்றபோதும், ஈரோடு வழியாகச் சென்றப்போதும், ஈரோட்டிலேயே செங்கோட்டையன் இருந்தாலும், அவர் பழனிசாமியைச் சந்திக்கவில்லை.

செப்டம்பர் 5, 2025

'கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும். 10 நாள்களில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்' என்று செங்கோட்டையன் வெளிப்படையாகவே கெடு விதித்தார்.

அதிர்ந்து பேசாத செங்கோட்டையன் ஓப்பனாகவே கெடு விதித்தது அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

செப்டம்பர் 6, 2025

அடுத்த நாளே, செங்கோட்டையனின் கெடுவிற்கு அவரை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி எதிர்வினையாற்றினர் பழனிசாமி.

அது குறித்த அறிக்கையில், "கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. K.A. செங்கோட்டையன், M.L.A., அவர்கள் இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

செப்டம்பர் 8, 2025

டெல்லியில் அமித் ஷாவை மீண்டும் சந்தித்து இருந்தார் செங்கோட்டையன். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவையும் சந்தித்து இருந்தார்.

ஆனால், அவர் இந்தப் பயணத்திற்கு முன்பு, ஹரித்வாருக்குச் செல்வதாகவே கூறிவிட்டு சென்றிருந்தார்.

அக்டோபர் 30, 2025

தேவர் ஜெயந்தியையொட்டி, பசும்பொனுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.பன்னிர்செல்வமுடன் சென்றிருந்தார் செங்கோட்டையன். மேலும், அங்கு டி.டி.வி தினகரனையும் சந்தித்தார்.

கட்சியின் தலைமையுடன் முரணோடு இருக்கும் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டி.டி.வி தினகரனைச் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்டோபர் 31, 2025

நேற்று செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பாஜகவின் பங்கு

செங்கோட்டையன் நகர்வுகள் மற்றும் செங்கோட்டையன் நீக்கத்திற்குப் பின், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இதற்குத் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் மறுத்திருக்கிறார்.

இன்று...

இன்று காலையில் செங்கோட்டையனின் ஈரோடு அலுவலகத்தில், பழனிசாமி படம் மறைக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டது.

காலை 11 மணிக்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த நீக்கம் தன்னை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சட்ட ரீதியலான நடவடிக்கைகள் எடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

அடுத்து என்னென்ன நடக்க உள்ளது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

'தகுதிச்சான்றிதழ் பெற ரூ.20 லட்சம் லஞ்சம்' - பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். சரவணன் என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சக வரலாற்றுத்துறை பேராசரியரான வெங்கடேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவ... மேலும் பார்க்க

SIR: "பாதகமான வாக்குகளை நீக்குகிறார்கள்" - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் செயல்படுத்தவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது திமுக அரசு.இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந... மேலும் பார்க்க

முதல்வர் பதவி வாய்ப்பை யாராவது விடுவார்களா? பிக்பாக்கெட் அடிப்பதுபோல் அடித்து விடுவார்கள்

"எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக பிறந்தவர் செங்கோட்டையன் என்ற ஒரு தகுதியைத் தவிர அனைத்து தகுதிகளையும் பெற்று இறைவன் அருளால் முதலமைச்சராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி" என்று அ... மேலும் பார்க்க

UPSET Annamalai - அதிரடி EPS - கண்ணீரில் Sengottaiyan | MODI பேச்சும் Bihar தொழிலாளர்கள் கருத்தும்!

* அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!* "பொதுச் செயலாளர் ஆன பின் ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் எடப்பாடி" - செங்கோட்டையன் காட்டம். * ``செங்கோட்டையன் திமுகவின் பி டீம்!'' -... மேலும் பார்க்க