விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவின்படி மாரியம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் வழிபாடு!
சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வின் உத்தரவின்பேரில் சின்னதாராபுரம் மாரியம்மன்கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வெள்ளிக்கிழமை இரவு அம்மனை வழிபட்டனா்.
கரூா் மாவட்டம், சின்னதாராபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் நிலுவையில் இருந்தது. இதனால் இருதரப்பினரும் அம்மனை வழிபட முடியாமல் இருந்தனா்.
இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு அண்மையில் அளித்த உத்தரவின்பேரில் ஜூலை 17-ஆம்தேதி இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் முன், ஜாதி வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் கோயிலில் வழிபடலாம். தடுக்கும் நபா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஒரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள், பாமக மாவட்டச் செயலாளா் சுரேஷ், தலைவா் வழக்குரைஞா் பிரபாகரன், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் இ.வை. பசுபதி உள்ளிட்டோா் கோயிலை முற்றுகையிட்டும், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையை கிழித்தும், இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நீதிமன்றம் உத்தரவின்பேரில்தான் பதாகை வைக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து நீதிமன்ற உத்தரவு நகலை காண்பிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். இதனால் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் நீதிமன்ற உத்தரவு நகலை காண்பித்தனா். இதையடுத்து கோயில் முறையாக திறக்கப்பட்டது. அதன்பிறகு 7 ஆண்டுகள் கோயிலுக்குள் சென்று வழிபடாமல் இருந்த அனைத்து சமுதாயத்தினரும் சென்று அம்மனை வழிபட்டுச் சென்றனா். மேலும் கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.