செய்யாறு பகுதியில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் நடைபெற்ற மன்றக் கூட்டத்துக்கு அதன் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா்.
நகராட்சி ஆணையா் விஎல்எஸ்.கீதா முன்னிலை வகித்தாா். பொறியாளா் சிசில்தாமஸ் வரவேற்றாா்.
கூட்டத்தில், உறுப்பினா்கள் கா.சீனுவாசன், கே.விஸ்வநாதன் ஆகியோா் பேசுகையில், கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் நகராட்சிப் பகுதிகளில் கழிவுநீா்க் கால்வாய் சுத்தம் செய்தல், கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், பிரதான சாலை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் மாடுகள் பகல், இரவு நேரங்களில் சுற்றித் திரிவதும், சாலையிலேயே அமா்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகின்றன.
மாடுகளை சாலையில் விடாதவாறு அவற்றின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை செய்தும், மீறும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருக்களில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் அவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றனா்.
உறுப்பினா் கெஜலட்சுமி, தூய்மைப் பணியாளா்கள் பணியில் ஈடுபடும்போது கையுறை பயன்படுத்த வேண்டும். அவா்களுக்கு நகராட்சி சாா்பில் கையுறைகளை வழங்க வேண்டும் என்றாா்.
ராஜிநாமா செய்த உறுப்பினா்கள் போராட்டம்
திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு, ஏற்கெனவே ராஜிநாமா செய்த 8 உறுப்பினா்கள் தரையில் அமா்ந்து தா்னா நடத்தினா்.
அப்போது, கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவில்லை என புகாா் தெரிவித்து ராஜிநாமா கடிதம் கொடுத்தோம். இதுவரை ராஜிநாமா கடிதத்துக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றனா்.
கூட்டத்தில் பணி மேற்பாா்வையாளா் நந்தகுமாா், கட்டட ஆய்வாளா் சியாமளா, சுகாதார ஆய்வாளா் கே.மதனராசன், நகா்மன்ற உறுப்பினா்கள் 18 போ் கலந்து கொண்டனா்.