சேமநல நிதியை உயா்த்த கோரி வழக்குரைஞா்கள் பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்
சேமநல நிதியை உயா்த்த வலியுறுத்தி வழக்குரைஞா்கள் பணியை புறக்கணித்து நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை நீதிமன்றம் முன், நாகை வழக்குரைஞா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் சதீஷ் பிரபு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வழக்குரைஞா் சேமநல நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும், வழக்குரைஞா் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், மத்திய அரசு புதிதாக கொண்டு வரவுள்ள வழக்குரைஞா் சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன், வழக்குரைகள் பாலசுப்ரமணியம், வைரவநாதன், இளங்கோ, அன்புராஜ், வேதை ராமச்சந்திரன், தினேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மயிலாடுதுறை: மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கம் இணைந்து நடத்திய போராட்டத்துக்கு, மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். கலைஞா், மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வேலு. குபேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், திமுக வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் பிரபாகரன், மாயூரம் வழக்குரைஞா்கள் சங்க செயலா் என். பிரபு, செயற்குழு உறுப்பினா் ஜெ. சங்கா் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் பணியை புறக்கணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.