சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!
புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.
கணவர் விவாகரத்துக் கோரிய நிலையில், மனைவி தர மறுத்து, கடந்த 16 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தம்பதி, திருமணமான முதல் ஆண்டு வரைதான் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். அதன்பிறகு தனித்தனியே வாழ்கிறார்கள். இவர்களுக்கு இடையே மத்தியஸ்தமும் பலனளிக்கவில்லை. கருத்து வேறுபாடு சரியாகவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம், 142வது சட்டப்பிரிவின்படி, தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த வழக்கில் விவாகரத்து வழங்கி முடித்து வைப்பதாகத் தெரிவித்துள்ளது.
மணமுறிவு ஏற்பட்ட தம்பதியை, சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால், தொடர்ந்து அது மனவேதனையைத்தான் அதிகரிக்கும், இதுபோன்ற வழக்குகளில், ஒரே வீட்டில் தம்பதி ஒன்றாக வாழ முடியாதபோது நீதிமன்றம் விவாகரத்து வழங்கிவிடலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.