செய்திகள் :

சொர்க்கவாசல் விமர்சனம்: சிஸ்டத்தைக் கேள்வி கேட்கும் சிறைச்சாலை சினிமா; ஆனால் இந்தச் சிக்கல்கள்?!

post image

1999-ம் ஆண்டு சென்னை மத்தியச் சிறைக்குள் கலவரம் ஏற்பட்டதால், 45க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கிறார்கள். ஆட்சிக்கலைப்பு வரை கொண்டு செல்லும் இந்த கலவரத்தைப் பற்றி விசாரிக்க, இஸ்மாயில் (நட்டி) தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைக்கிறது மாநில அரசு. அதன் பொருட்டு, அச்சம்பவம் குறித்தும், சாதுவான ஏழை இளைஞரான பார்த்திபன் (ஆர்.ஜே பாலாஜி) இக்கலவரத்திற்குள் சிக்கிக்கொண்டது குறித்தும், பிரபல ரவுடியான சிறைக்கைதி சிகா (செல்வராகவன்) குறித்தும், சிறை கண்காணிப்பாளர் சுனில் (ஷராஃப் யு தீன்) குறித்தும் விசாரிக்கத் தொடங்குகிறார் இஸ்மாயில். அவரிடம் சிறை காவல் அதிகாரி கட்டபொம்மன் (கருணாஸ்), பார்த்திபனின் காதலி ரேவதி (சானியா ஐயப்பன்), காவல்துறை அதிகாரிகள் எனப் பலர் தங்களின் பார்வையில் வாக்குமூலம் அளிக்கிறார்கள். இறுதியில், அக்கலவரத்திற்குக் காரணம் என்ன, பார்த்திபன் எப்படி இக்கலவரத்திற்குள் வந்தார், இறுதியில் பார்த்திபனுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்தின் 'சொர்க்கவாசல்'.

சொர்க்கவாசல் படத்தில் ...

செய்யாத குற்றத்திற்காகச் சிறைக்கு வரும் சாதுவான இளைஞராக குடும்ப பாசம், ஆற்றாமை, வெறுமை, பதற்றம், வெடித்து அழும் இடம் போன்றவற்றில் தேவையான நடிப்பை வழங்கி அக்கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. ஆனால், அவரின் பாத்திரம் வெவ்வேறு பரிணாமங்களை எடுக்கும்போது, இன்னுமே அவரிடமிருந்து அழுத்தமான நடிப்பு தேவைப்பட்டிருக்கிறது. அது ஏனோ மிஸ்ஸிங்! ஒரு ரிட்டயர்டு டானாகவும், சிறையையே கைக்குள் வைத்திருக்கும் கைதியாகவும் கனமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் செல்வராகவன். ஒரு கதாபாத்திரமாக பாஸாகிறார் என்றாலும், அவரின் பின்கதைக்கு நியாயம் செய்யும் வகையில் காட்சிகள் இல்லாததால், பல காட்சிகளில் அவரின் நடிப்பு வீரியமற்று போகிறது.

படம் முழுவதும் பங்களித்திற்கும் கருணாஸின் யதார்த்தமும் நுணுக்கமும் கொண்ட நடிப்பு, அவரின் ஆழமான கதாபாத்திரத்துக்குக் கூடுதல் கனத்தைச் சேர்த்திருக்கிறது. தேவையான வெறுப்பைச் சம்பாதித்தாலும், பல இடங்களில் டப்பிங் சின்க் ஆகாமல் இருப்பதால், செயற்கையான உணர்வைத் தருகிறது ஷராஃப் யு தீன்னின் நடிப்பு. சிறைக் கைதியாக, கொடூர வில்லனாக உலா வரும் ஹக்கிம் ஷாவின் ஆக்ரோஷம் இரண்டாம் பாதியில் கைகொடுக்கிறது. நட்டி என்கிற நடராஜன், சானியா ஐயப்பன், ஷோபா சக்தி, பாலாஜி சக்திவேல், மௌரிஷ், சாமுவேல் ராபின்சன், ரவி ராகவேந்திரா என எல்லா துணை நடிகர்களுமே கொடுத்த வேலையைச் செய்து, அக்கதாபாத்திரங்களை மனதில் நிற்கும்படி மாற்றியிருக்கிறார்கள்.

90 சதவிகிதம் சிறைக்குள்ளேயே நடக்கும் படத்திற்கு, ரிப்பீட் அடிக்காத ஃப்ரேம்களால் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன். கதாநாயகனின் இறுக்கத்தையும், சிறையில் நடக்கும் வன்முறையையும் திகட்டலின்றி திரையில் கொண்டு வந்து, பதற்றத்தைக் கூட்டுகிறது அவரின் கேமரா. நான்-லீனியராக நகரும் திரைக்கதையைத் தெளிவாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே. கிறிஸ்டோ சேவியரின் இசையில் அனிருத் குரலில் ஒலிக்கும் 'தி எண்ட்' என்கிற ஆங்கிலப் பாடல் கலவரத்தின்போதான கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் உரமேற்றியிருக்கும் கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை, படத்திற்குப் பலம். ஒட்டுமொத்த சிறை உலகையும் கண்முன்கொண்டு வந்த விதத்தில் எஸ்.ஜெயசந்திரனின் கலை இயக்கம் ஓவர் டைம் பார்த்திருக்கிறது. தினேஷ் சுப்புராயனின் சண்டை இயக்கமும் கவனிக்க வைக்கிறது.

சொர்க்கவாசல் படத்தில்...

ஆளும் அரசுகளும், அதிகாரமும் சிறைச்சாலைகளையும், சிறைக்கைதிகளையும் எப்படி தங்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன, சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமைகள் எப்படி மறுக்கப்படுகின்றன, அரசு - காவல்துறை - சிறை - கைதிகள் என்ற சங்கிலிக்குப் பின்னாலுள்ள அரசியல் என்ன போன்றவற்றை வீரியமாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன்.

சாதுவான இளைஞர் சிறையில் மாட்டிக்கொள்வது, அங்கே சிறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ரவுடி எனக் கதை தொடக்கத்தில் எளிமையாக நகர்ந்தாலும், வரிசையாக எக்கச்சக்க கதாபாத்திரங்களைக் குவித்ததும் களம் பரபரக்கத் தொடங்குகிறது. ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலும் மாற்றி மாற்றி திரைக்கதை நகர்வதால், பார்வையாளர்கள் யாரைப் பின்தொடர வேண்டும் என்ற குழப்பம் ஆங்காங்கே ஏற்படுகிறது. இதற்கிடையில், கதாநாயகனின் கதை, அழுகை, வறுமை போன்ற அதீத எமோஷனுடன் சொல்லப்பட்டாலும், எக்கச்சக்க கதாபாத்திரங்கள் ஹவுஸ்ஃபுல் மோடில் உலாவுவதால் அதனுடன் ஒன்ற முடியாமல் போகிறது.

ஆனால் அந்த நெருக்கடியிலும் ஒவ்வொரு சிறை கைதிகளையும் சிரத்தையுடன் வடிவமைத்திருக்கிறது தமிழ் பிரபா, அஷ்வின் ரவிசந்திரன், சித்தார்த் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய எழுத்துக்கூட்டணி. முக்கியமாக, ஏசுவாகச் சித்திரிக்கப்படும் நைஜீரிய நாட்டு இளைஞர், அரசியல் தெளிவோடு போராடும் இலங்கைத் தமிழர் சீலன், பார்த்திபனின் நண்பரான ரங்கு, சிறையில் சீனியர் குக்காக இருக்கும் பஷீர் போன்ற கதாபாத்திரங்கள் படத்தின் பலம். இதனுடன் நான்-லீனியரான திரைக்கதை, இடைவேளைக்கு முன் பின்னப்படும் முடிச்சுகள் போன்றவை முதற்பாதியை பாஸாக வைக்கின்றன.

இரண்டாம் பாதியில் அரங்கேறும் கலவரத்தின் தொடக்கப்புள்ளி, சிறையையே அதிர வைக்கும் கலவரம் எனப் பரபரப்பிற்குக் குறைவில்லாமல் நகர்கிறது திரைக்கதை. முதற்பாதியில் வரும் கதாபாத்திரங்கள் இதில் உச்சம் பெறுவதால், பரபரப்போடு ஆழத்தையும் பெறுகிறது படம். அதேநேரம், முதற்பாதி எமோஷனலாக க்ளிக் ஆகாததால், இரண்டாம் பாதியிலுள்ள பல முக்கிய காட்சிகள் கச்சிதமாக எழுதப்பட்டிருந்தாலும், ஒரு முழுமையான உணர்வைத் தர மறுக்கின்றன.

சொர்க்கவாசல் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி

'தேவைப்படும் போது பொம்பள, தேவைப்படாதபோது ஆம்பள', 'வன்முறைதான் உலகில் மிகப்பெரிய கோழைத்தனம்', 'நீங்க எவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தாலும் எதிர்ல இருக்கறவனை முட்டாள்ன்னு நினைக்காதீங்க' எனப் பல வசனங்கள் கவனிக்க வைத்தாலும், எல்லா கதாபாத்திரங்களும் அதன் இயல்பை மீறி தத்துவார்த்தமாகப் பேசுவதும், பிரசங்கம் செய்வதும் துறுத்தல்! செல்வராகவனின் சிகா கதாபாத்திரத்தை ஆழமாக எழுதாமல் விட்டது, ஆர்.ஜே பாலாஜியின் கதாபாத்திரம் என்ன ஆகப்போகிறது என்பதை இடைவேளையிலேயே சொல்லியது, அவரை ஏன் சிலர் காப்பாற்றுகிறார்கள் என்ற கேள்வி, ஆங்காங்கே வெளிப்படும் கூடுதல் லாஜிக் ஓட்டைகள் போன்றவை படத்தின் மைனஸ்.

சிறை என்பது கைதிகளைத் திருத்தும் இடமாக இருக்கிறதா என்ற விவாதத்தை எழுப்பி கவனம் பெற்றாலும், எமோஷனலாக பாதி வழியை மட்டும் விடுவதால், இந்தச் சொர்க்கவாசலுக்குள் சற்று சிரமப்பட்டே நுழைய வேண்டியதாக இருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

Inbox 2.0 Ep 20: RJ Balaji - Sorgavaasal Special | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 20 இப்போது வெளிவந்துள்ளது.வீடியோவை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணி... மேலும் பார்க்க

Sorgavaasal Public Review | FDFS Review | RJ Balaji, Saniya Iyappan, Selvaragavan

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/ParthibanKanav... மேலும் பார்க்க

Samantha: `Until...' - அப்பா ஜோசப்பின் மரணம்; உருக்கமாகப் பதிவிட்ட சமந்தா

தமிழ், தெலுங்கு, இந்தி எனத் தன் திரைத்திறமையை இந்தியா முழுவதும் கொண்டு சென்று தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகை சமந்தா ரூத் பிரபு.ஆனால், சமீபத்தில் உடல் நிலை பாதிப்பு, அவரைச் சுற்றி வலம்... மேலும் பார்க்க

Jason Sanjay: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ; வெளியான அப்டேட்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை தயாரிப்ப... மேலும் பார்க்க

Thug Life: ``மணி சார் மிகவும் ஆழமான சினி உலகை உருவாக்குகிறார்" - தக் லைஃப் குறித்து அலி ஃபைசல்!

0மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சிம்பு, த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், அலி ஃபசல், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக... மேலும் பார்க்க

Madhavan: மாதவனின் 28 ஆண்டுகளுக்கு முந்தைய லட்சியம்; வைரலாகும் இன்ஸ்டா பதிவு

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் மாதவன்.தமிழில் அலைபாயுதே, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், யாவரும் நலம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட பல... மேலும் பார்க்க