ஜகதீப் தன்கரை நீக்க தீர்மானம்: விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி!!
மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீா் பிரிவினை கோரிக்கையை ஆதரிக்கும் அமெரிக்க கோடீஸ்வரா் ஜாா்ஜ் சோரஸுடன் காங்கிரஸ் தலைமைக்குத் தொடா்பிருப்பதாக கூறப்படும் பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து மாநிலங்களவையில் திங்கள்கிழமை அக்கட்சி எம்.பி.க்கள் விவாதத்தை எழுப்பினா். அதேநேரத்தில், அதானி லஞ்ச புகாா் விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்தப் பிரச்னையை ஆளுங்கட்சி எழுப்புவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் விமா்சித்தனா்.
இவ்விவகாரம் தொடா்பான நோட்டீஸ்களை நிராகரித்தபோதும், எப்படி ஆளுங்கட்சி உறுப்பினா்கள் இந்தப் பிரச்னையை எழுப்ப அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் அனுமதிக்கிறாா் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே, ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.
மேலும், அவையில் ஜகதீப் தன்கா் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்பிக்கள், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர்.
இதையும் படிக்க : 2024 இல் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் யார் தெரியுமா?
காங்கிரஸ், சமாஜவாதி, திமுக, இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 60-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை மாநிலங்களவை செயலரிடம் வழங்கினர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை அவை கூடியவுடன் மாநிலங்களவை தலைவருக்கு எதிரான தீர்மானம் மீது விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதால் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அவை கூடியவுடன் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.