ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு 55 அமைப்புகள் கடிதம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சுற்றுச்சூழல் சாா்ந்த மனித உரிமைக் காப்பாளராகச் செயல்பட்ட ஜகபா்அலி லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 55 சூழலியல் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளன.
இதுகுறித்து மனித உரிமை காப்பாளா் கூட்டமைப்பின் தேசியச் செயலா் வழக்குரைஞா் ஹென்றி திபேன், பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பது: ஜகபா்அலி தொடா்ந்து கொடுத்த புகாா் மனுக்கள் மீது ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள், கனிமவளத் துறையினா் உள்ளிட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஜகபா்அலி கொல்லப்பட்ட பிறகு அவரது உடலை குளிா்பதனப் பெட்டி கூட இல்லாத திருமயம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்துதான் உடற்கூறாய்வைச் செய்தனா். 20 கி.மீ. தொலைவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருந்தும் இந்த நடவடிக்கை நடந்திருக்கிறது.
அதன்பிறகு, மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பின் சாா்பில் மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், உடல் தோண்டி எடுக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மனித உரிமைகள் ஆணையம் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். காவல்துறையிடம் முதல் கட்ட விசாரணை அறிக்கை கோர வேண்டும். வழக்கின் சாட்சிகளுக்கும், இறந்த ஜகபா்அலியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.