கடலூர்: `கடன் கொடுத்தால் அப்படிக் கூப்பிடுவியா..?' - சீறிய இளம்பெண்... அடித்துக்...
'தகரக் கதவுகள்… பூட்டு இல்லை… ஃபிரிஸர் இல்லை' - இடியும் நிலையில் அரசு மருத்துவமனை பிணவறை கட்டிடம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல், திருச்சுழி, காரியாப்பட்டி, கோவிலாங்குளம், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை விபத்தில் இறப்பவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், விஷக்கடி, இடி மின்னல் மூலம் இறப்பவர்கள், கொலைச் சம்பவத்தால் இறப்பவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காகப் பாதுகாப்பாக வைப்பார்கள்.
அரசு மருத்துவமனையாக மட்டுமே இயங்கி வந்த இந்த மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ரூ. 31 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
பல சிறப்பம்சங்கள் கொண்ட மருத்துவமனையாக மாறி வரும் இம்மருத்துவமனையில் பிணவறைக் கட்டிடம் மட்டும் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிலையில் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம், “பிணவறைக் கட்டிடம் முழுவதும் சேதமடைந்து கதவு, ஜன்னல்கள் பெயர்ந்து கிடக்கின்றன. உடைந்த மரப்பலகைகள் வைத்து மறைத்திருக்கிறார்கள்.

பிணவறை உள்ளே பரிசோதனை மேடை இடிந்துள்ளது. தகரக்கதவுகளுக்கு பூட்டு போடாததால் கம்பியால் இழுத்து கட்டியிருக்கிறார்கள். கதவு இடைப்பகுதி, ஜன்னல் இடைப்பகுதி வழியாக துர்நாற்றம் வீசுகிறது. கரண்ட் உள்ளது. ஆனால், இங்குள்ள ஒன்றிரண்டு ஃபிரீசர் பாக்ஸ்களும் பழுதாகி உள்ளது. இந்த நிலையில், பிணவறையின் வெளிப்பகுதியில் உடல்களை வைப்பதால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது.
ஃபிரீசர் பாக்ஸ் வைத்து பிரேதப் பரிசோதனை வரை உடலைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் உயிரிழந்தவரின் உறவினர்கள் அவர்களின் சொந்த செலவில் வெளியில் வாடகைக்கு எடுத்துதான் வைக்க வேண்டியுள்ளது. இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.2,000 வரை செலவாகிறது. உயிரை உறவை இழந்த இந்தத் துக்கமான நிலையிலும்கூட உடல்களைப் பாதுகாப்பது பெரும் பிரச்னையாக உள்ளது.

எனவே விரைந்து நவீன முறையில் குளிரூட்டும் வசதியுடன்கூடிய பிணவறையைக் கட்டிட மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் கொண்டு வந்தபோது பிணவறை கட்டிடத்தின் நிலை குறித்து இறந்தவரின் உறவினர்கள் கட்டிடத்தின் நிலை குறித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.



















.jpeg)