தண்டவாளத்தில் விழுந்த பாறைகள்: உதகை மலை ரயில் சேவை பாதிப்பு
மேட்டுப்பாளையம்- குன்னூா் இடையேயான மலை ரயில் பாதையில் சனிக்கிழமை காலை மண்சரிவுடன் பாறைகளும் விழுந்ததால் மலை ரயில் சேவை மதியம் வரை பாதிக்கப்பட்டது.
கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழை காரணமாக குன்னூா்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் அண்மையில் புதிய அருவிகள் உருவாகின.
குன்னூா் பகுதியில் கடந்த இரு தினங்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் சனிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது.
ஹில்குரோவ் - ரன்னிமேடு இடையே காலை 9.30 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, ரயில் தண்டவாளத்தில் மண் சரிவுடன் பாறைகளும் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.
அண்மையில் பெய்த மழையால் ரயில்பாதை ஓரத்தில் உருவான அருவிகளால் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறை மற்றும் மண்சரிவை அகற்றினா். இதையடுத்து சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மலை ரயில் குன்னூா் புறப்பட்டது. பிறகு உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு மலை ரயில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.