அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்: அண்ணாமலை
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும், அப்போது சித்தாந்த அடிப்படையில் கட்சி வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்படும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மறைந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் வி. ரமேஷ் 12-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(சனிக்கிழமை) அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்று அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசியதாவது: சேலம் ஆடிட்டர் ரமேஷ், அரவிந்த் போன்றவர்கள் பாஜகவில் வளர்ந்து வந்த தலைவர்களாவர். இவர்கள் எல்லாம் பெரிய அளவில் வந்துவிடக்கூடாது என்ற நோக்கிலே அவர்களை படுகொலை செய்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவத்தில், அப்போதைய ஆட்சியாளர்கள் குற்றவாளிகளைப் பிடிக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. முதலில் சிலரை குற்றவாளி என்றனர், அதன் பிறகு வேறு சிலரை காண்பித்தனர். பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித்ஷாவிடம் வலியுறுத்தி வழக்குகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாஜக கட்டாயம் ஆட்சிக்கு வரும். அப்போது சித்தாந்த அடிப்படையில் ஆடிட்டர் ரமேஷ் போன்ற தியாகிகளின் மரணத்துக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், "நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. திமுகவைச் சேர்ந்த சிலர் இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசு உரிய விசாரணைக் குழு அமைத்து சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பத்திரிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து தனது குறைகளைத் தெரிவிப்பது விதிகளுக்கு புறம்பானது என்றாலும், அவருடைய மனக்குமுறலை தெரிவிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார். இந்த பிரச்னையில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எந்தவித குழப்பமும் இல்லை. அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கூறியது 2026 தேர்தலுக்குப் பிறகு இருக்கலாம் என்றார்.
அப்போது நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.சரவணன், மேற்கு மாவட்ட தலைவர் எம். ராஜேஷ்குமார் மற்றும் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.