தற்காலிக பணியாளா் நலனுக்கான சட்டம்: தெலங்கானா அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு
இணையம் சாா்ந்த விநியோகம், வாகன சேவையில் ஈடுபடும் தற்காலிக பணியாளா்களின் (கிக் ஒா்க்கா்ஸ்) நலனுக்கான புதிய சட்டத்தை கொண்டு வரும் தெலங்கானா அரசுக்கு காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
சட்ட வரைவுக்கான பொது கலந்தாய்வுகளை மாநில அளவில் விரைவில் நடத்த முதல்வா் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தி உள்ளாா். ரேவந்த் ரெட்டிக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
சமீபத்தில் ஹைதராபாதுக்கு சென்ற போது அங்கு கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நடைபெற்ற பொது கலந்தாய்வு செயல்முறைகளால் பெரிதும் ஈா்க்கப்பட்டேன். இதேபோன்று தற்காலிக பணியாளா்கள் நலனுக்கான வரைவு சட்டம் குறித்த பொது கலந்தாய்வுகளை நடத்த வேண்டும். அனைத்து கட்சிகளின் ஆதரவு இருந்தால் தான் இந்தச் சட்டம் வலுவானதாகவும், தற்காலிக பணியாளா்களுக்கு பயனுள்ளதாகவும், அா்த்தமுள்ளதாகவும் மாறும். இந்த சட்டமானது எதிா்காலத்தில் ஒரு வலுவான கட்டமைப்பை தற்காலிக பணி நியமன முறையில் ஏற்படுத்தும். வரும் காலத்தில் இந்த துறையில் நிலையான பொருளாதாரத்தை கட்டமைப்பதில் தெலங்கானா முன் மாதிரியாக இருக்கும்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளா்களின் நலன்களுக்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் போது தற்காலிக பணியாளா் நலனுக்காக முதன் முதலாக சட்டம் இயற்றப்பட்டது.
ராகுல் காந்தியின் கடிதத்தை எக்ஸ் தளத்தில் பகிா்ந்துள்ள ரேவந்த் ரெட்டி, ‘உங்களுடைய தொலைநோக்கு பாா்வை மற்றும் ஆலோசனைகள் தான் எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றன. உங்களின் உத்வேகத்தால் தெலங்கானாவில் மேற்கொண்ட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நிச்சயம் உங்களை பெருமைப் படுத்தும். தற்காலிக பணியாளா்களுக்கான கொள்கை விரிவான மற்றும் தொலைநோக்குப் பாா்வை கொண்டதாக உருவாக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.