தாம்பரம்: நகைகளைத் திருடிய அப்பா; பிடித்துக் கொடுத்த மகன் - பாராட்டிய போலீஸ்!
திருச்சியைச் சேர்ந்தவர் வசந்தா மாரிக்கண்ணு. 80 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் ஹைதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இன்று (11.12.2024) விமானம் மூலம் சென்னை வந்தார். இதையடுத்து மீனம்பாக்கத்திலிருந்து தாம்பரத்துக்கு செல்ல வசந்தா மாரிக்கண்ணு, ஆட்டோ ஒன்றில் ஏறியிருக்கிறார். காலை 9.45 மணியளவில் ஆட்டோ குரோம்பேட்டை, டி.என்.ஹெச்.பி சாலை வழியாக பச்சைமலை, z சென்றது. அப்போது ஆட்டோ டிரைவர், வசந்தா மாரிக்கண்ணுவை மிரட்டி அவர் அணிந்திருந்த பத்து சவரன் தங்க நகைகளைப் பறித்தார். பின்னர் வசந்தாவை ஆட்டோவிலிருந்து கீழே தள்ளிவிட்டு டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வசந்தா மாரிக்கண்ணு அவ்வழியாக வந்தவர்களிடம் விவரத்தைக் கூறி உதவி கேட்டார். பின்னர் தாம்பரம் காவல் நிலையத்துக்கு வந்த வசந்தா, நகை பறிப்பு குறித்து புகாரளித்தார். இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தாம்பரம், கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்துக்கு வந்தார். அவர், "என்னுடைய அப்பாவின் பெயர் கணேசன், ஆட்டோ டிரைவராக உள்ளார். இன்று பயணி ஒருவரிடமிருந்து பத்து சவரன் தங்க நகைகளைப் பறித்த அவர், அந்த நகைகளை என்னிடம் கொடுத்து அடகு வைக்க கூறினார். அந்த காரியத்தைச் செய்ய எனக்கு மனமில்லை. அதனால் நகைகளைப் பறித்த என்னுடைய அப்பா கணேசனை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்" என்று அங்கிருந்த போலீஸாரிடம் கூறினார். அதைக் கேட்ட போலீஸார், காவல் நிலையத்திலிருந்த வசந்தாவிடம், ஆட்டோ கணேசனை காண்பித்து இவரா உங்களிடம் தங்க நகைகளைப் பறித்தார் என்று விசாரித்தனர். அதற்கு வசந்தாவும் ஆமாம் என்று கூற ராமசந்திரன் கொண்டு வந்த தங்க நகைகளையும் வசந்தாவிடம் காண்பித்தனர். அதைப் பார்த்த வசந்தா, இதுதான் என்னுடைய நகைகள் என கூறினார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் கணேசனைக் கைது செய்த போலீஸார், நகைகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் கணேசனை ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். தவறு செய்தது தந்தை என்றாலும் நேர்மையாக அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ராமசந்திரனை போலீஸாரும் ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தாவும் பாராட்டினர்.