தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணா்கள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
சென்னையில் உள்ள பள்ளிகள், விமான நிலையம் உள்ளிட்டவற்றுக்கு அண்மைக்காலமாக தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஓா் அழைப்பில் பேசிய மா்மநபா், தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்தாா்.
அதன்பேரில், தாம்பரம் ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணா்களுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனா். தண்டவாளம், சிக்னல் கட்டுப்பாட்டு அறை, ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கடைகள், அலுவலகங்கள், நடைமேடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மோப்பநாய் உதவியுடன் முழுமையான சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதனால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு வதந்தி எனத் தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.