தார்ப்பாய் மூடிய வீடு; ஓதம் ஏறிய தரை-மாற்றுத்திறனாளி மகன்களை பராமரித்து வரும் முதியவரின் துயரக் கதை
இரண்டு மாற்றுத்திறனாளி மகன்களைப் பராமரித்து வாழ்ந்து வரும் 80 வயது முதியவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவரைக் காண்பதற்காகச் சென்றோம்.
தார்ப்பாய் மூடிய குடிசை வீடும், ஓதம் ஏறிய தரையும், உடைபாடுகளுடன் இருந்த மண் சுவரும் அவர்கள் வறுமையின் கோரப் பிடியை நமக்குக் கடத்தியது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா கோவிலூர் மணல்மேடு பகுதியில் வசித்து வருபவர் விஸ்வலிங்கம் (80). இவருக்கு பக்கிரிசாமி (46), பழனிதுரை (43) என்ற திருமணமாகாத இரண்டு மாற்றுத்திறனாளி மகன்கள் உள்ளனர். இருவரையும் பாதுகாத்து பராமரித்து வரும் விஸ்வலிங்கம் பேசத் தொடங்கினார். "என் பேரு விஸ்வலிங்கம் எனக்கு 80 வயசு ஆகுது. எனக்கு ரெண்டு மகனுவோ இருக்கானுவோ.
அவனுவோ பொறந்தப்போ 'உனக்கென்னப்பா ரெண்டும் ஆம்பள புள்ளயா பெத்துருக்க ஒரு கஷ்டமும் கவலையும் இல்லைன்னு' ஊரே சொன்னுச்சு கொஞ்ச காலத்துக்கு அப்பறோம் ஒருத்தன் ஒருத்தனுக்கா கை, கால் புடிச்சு இழுக்க ஆரம்பிச்சது நானும் என் மனைவி பார்வதியும் புள்ளைங்க ரெண்டும் நல்லபடியா குணமாகணும்னு போகாத ஊரு இல்ல. வேண்டாத சாமி இல்ல. அப்புறம் தான் தெரிஞ்சது அது ஏதோ ஒரு வியாதியாம் ஆரம்பத்துல கவனிக்காம விட்டதுனால ரெண்டு பேரோட கஷ்டத்துக்கு நாங்களும் ஒரு காரணமாகிட்டோம். என் பொண்டாட்டி இருந்தப்போ ரெண்டு பேரையும் குளிப்பாட்ட, உதவியா இருந்தா. அஞ்சு வருஷம் முன்ன புண்ணியவதி அவளும் போய் சேந்துட்டா. அவளுக்கு வைத்திய செலவு பாக்க, வீடு கட்டன்னு சொல்லி வீட்டு பத்திரத்தை அடகு வச்சேன்.
அது வட்டி மேல வட்டியா இருக்கு. நான் நல்லா இருந்த காலம் வரையிலும் ஓடி ஆடி சம்பாதிச்சிட்டு வந்து ரெண்டு பேருக்கான வைத்திய செலவ ஈடு கட்டுனேன். இப்ப முன்ன மாதிரி உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. கண்ணுல வேற பொற விழுந்துட்டு. மூணு பேரும் வெந்ததையும் வேகாததையும் சாப்பிட்டு வாழ்ந்துட்டு வர்றோம். யாரு கையாவது புடிச்சு கூரைக்கு கீத்து ஏத்திடலாம்ன்னு இருக்கேன். ஆனா அந்த ஆண்டவன் இதுவரையிலும் வழி காட்டல... நான் இருக்கிற வரையிலும் இவங்களுக்குத் துணையாய் இருக்கேன் நான் இல்லாத காலத்துல என்ன பண்றதுன்னு"என்று சொல்லி தழுதழுத்தார்.
விஸ்வலிங்கத்தின் மூத்த மகனிடம் பேசினோம் "என் பேரு பக்கிரி சாமி கொஞ்ச காலத்துக்கு முன்னால போலியோ அட்டாக்கால கையும் காலும் பாதிச்சிடுச்சு. இப்போ எல்லா வேலைக்கும் இன்னொருத்தர் துணையையே நாடி இருக்க வேண்டியதா இருக்கு. எனக்கு ஒரு தம்பி இருக்கான். அவனுக்கு 43 வயசாகுது. தம்பிக்கும் இதே பிரச்சனைத்தான் ஆனா அவ உடம்பு ரொம்ப மோசமா போயிட்டு, ஆரம்பத்துல ரெண்டு பேரும் ஒரே வீட்டுல தான் இருந்தோம் வீட்டுல ஒருத்தர் நடமாட்டமா இருந்தாதானே தைரியமா இருக்கலாம். ஒரே வீட்டுக்குள்ள எப்படி ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பாத்துகிட்டு கண்ணீர் வடிக்கிறது'னு ஒரு நாள் தனியா கொட்டா போடலாம்'னு முடிவு பண்ணி ரெண்டு பேருக்கும் சேர்த்து கவர்மெண்ட் கொடுக்கிற 3000 பணத்துல ஒரு கொட்டா போட்டு தனியா இருக்கேன். இந்த காலத்துல 3000 கொட்டா எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கு எங்க வாழ்க்கையும்...
இதுல தம்பிக்கு மாசம் மாசம் யூரின் பேக் மாத்த பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் போகணும். அங்க இந்த 3000 தண்ணியா கரைஞ்சிடும். நெதமும் ஒரே வேலை சாப்பாட்டில் தான் வயித்துப் பாடு ஓடிக்கிட்டு இருக்கு. கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா தம்பியோட உடல்நிலைய பாத்து அவங்களே தயக்கம் காட்டுறாங்க. அதுவும் இல்லாம அந்த வைத்தியம் அவனுக்கு ஒத்துக்க மாட்டேங்குது. நடமாடும் மருத்துவமனை நர்சுகளும் தம்பி தரையில படுத்து கெடக்கான், யூரின் பேக்கும் கீழே கெடக்கு, அதுனால எங்களால மாத்த முடியாது'னு கையை விரிச்சிட்டாங்க. நான் ஒழுகுற கொட்டாயிலும் தம்பி ஓதம் ஏறுன கொட்டாயிலும் படுத்து காலம் கழியுது எனக்கு ஒரு பொட்டிக்கடை வச்சி கொடுத்தா வருமான ஈட்ட ஒரு வழி பொறக்கும்" என்றார்.
பக்கிரி சாமி தம்பியான பழனி துறையை காண மற்றொரு வீட்டுக்கு சென்றோம். தோல் போர்த்திய உடம்பாய் ஓதம் ஏறிய தரையில் அடுப்பங்கரை ஓரமாய் மரப்பலகையின் மேல் துணி விரித்து தரையோடு தரையாக படுத்தபடி கிடந்தார். அவரோடு உரையாடினோம் "என்னால ரொம்ப நாழி பேச முடியாது ஏன்னா யூரின் டியூப் குத்தும் அதுவுமில்லாம மூச்சிரப்பு வேற என்று பேச தொடங்கிய பழனி நானும் அண்ணனும் நல்லாத்தான் படிச்சிக்கிட்டு இருந்தோம்.
என்னன்னு தெரியல ஒரு நாள் கை சுருங்கிப் போச்சு, அப்புறம் கால் சுருங்கிப் போச்சு, இப்போ இப்படி ஆச்சு என்ற கவலையுடன் இருமினார். தரையில படுத்து இருக்கிறதுனால கொஞ்சம் கஷ்டம். திங்கிறது இட்லியும், தண்ணியும்'ங்கிறதால பெத்தவனுக்கு வேற எந்த கஷ்டத்தையும் கொடுக்கல.
கடவுள் கிட்ட இப்போதைக்கு நான் வேண்டறது என்னன்னா ஒரு கட்டில் இருந்தா என்னோட அவதி கொஞ்சம் குறையும் நல்ல உள்ளம் படைத்தவங்களும் நம் அரசும் எங்களுக்கு ஒரு வழி காட்டணும் எ்ன்றார். கலங்கிய கண்களோடு எதிர்காலத்தை நோக்கியிருக்கின்றனர் விஸ்வலிங்கமும் அவரின் இரண்டு மகன்களும்!