`பால் பவுடருக்கு பதில் க்யூப்' - ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' -...
”திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ் விஜயன் வீட்டில் கொள்ளை”- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது
திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன். இவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக-வில் விவசாய அணியின் மாநில செயலாளராகவும் பதவி வகிக்கிறார். தஞ்சாவூர் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராகவும் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகரில் ஏ.கே.எஸ்.விஜயனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி இரவு ஏ.கே.எஸ்.விஜயனின் மனைவி ஜோதிமணி தன் மகளுடன் சித்தமல்லியில் உள்ள வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து கடந்த 1ம் தேதி காலை ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் அவரின் மனைவி, மகள் ஆகியோர் தஞ்சாவூரில் உள்ள வீட்டுக்குத் திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 87 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ஏ.கே.எஸ்.விஜயன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். எஸ்.பி.ராஜாராம் உள்ளிட்ட போலீஸார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கை ரேகை நியணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் அரசியல் வட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆளும் கட்சி பிரமுகர் வீட்டிலேயே கொள்ளை போனதை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்யும் என்பதால் போலீஸார் இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தினர். இதில் ஈடுப்பட்ட கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கொள்ளை நடந்த வீட்டுக்கு அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வு செய்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, மகன்கள், மகள் ஆகியோர் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதையும் அவர்கள் தர்மபுரியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீஸார் தர்மபுரிக்கு விரைந்து சென்று ரயில் நகரை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன்கள் சாதிக் பாஷா (33), மொய்தீன் (37), மகள் ஆயிஷா பர்வீன் (30), மனைவி பாத்திமா ரசூல் (54) ஆகிய நான்கு பேரை கைது செய்து அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து கொள்ளைபோன 87 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதே குடும்பத்தைச் சேர்ந்த தலைமறைவாக உள்ள ஷாஜகான் (26) என்பவரைத் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















